இந்தியாவின் சோகம் வறுமையல்ல. வறுமையை ஏற்றுச் சகித்துக்கொண்டு வாழும் ஏழை மக்களே!!!

உலகில் நாகரிகம் தொடங்கிய காலத்திலிருந்தே ஏழ்மை ஒரு விவாதப் பொருளாக உள்ளது. கி.மு. 5-ம் நூற்றாண்டில் ப்ளாட்டோ ""அதிகமான ஏழ்மையும், அதிகமான பணபலமும் மக்களிடம் காணப்பட்டால் அது தீங்கு விளைவிக்கும்'' என்றார். ""ஏற்கெனவே வசதி படைத்தவர்கள் மேலும் வசதியைப் பெருக்கிக் கொள்வதை முன்னேற்றம் எனக் கருத முடியாது. வசதியில்லாதவர்களுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுப்பதே முன்னேற்றம்'' என 1937-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் கூறினார். ஏழைகளின் வாழ்க்கைத் தரம் பற்றி பேசாத தலைவர்களே கிடையாது என்றபோதிலும் ஏழ்மை என்றால் என்ன என்பதை வரையறுப்பது மிக முக்கியமான ஒரு கடமையாகிறது. காரணம், இந்தியா போன்ற ஒரு நாட்டில் பல லட்சம் கோடி ரூபாய்கள் ஏழ்மை மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்குச் செலவிடப்படுகிற காரணத்தால் அவை சரியானவர்களுக்குத்தான் போய்ச் சேருகின்றனவா எனும் கேள்வி எழுகிறது. அதனால்தான் ஏழ்மை என்றால் என்ன, ஏழைகள் யார் எனும் கேள்வி மிக முக்கியமானது ஆகிறது. ஏழ்மை பற்றி உலக அறிஞர்கள் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் ஆராய்ச்சியை 1901-ம் ஆண்டு சீபாம் ரவுண்டிரி எனும் ஆங்கிலேய ஆராய்ச்சியாளர் நடத்தினார். அதன்படி இங்கிலாந்தின் யார்க் நகரில் 1899-ம் ஆண்டு வாழ்ந்த மக்களில் 10 சதவிகிதத்தினர் ஏழைகள் எனும் முடிவினை அவர் வெளியிட்டார். தங்களது உடல் பராமரிப்பிற்குத் தேவையான உணவு, குடியிருக்கும் இடத்திற்கான வாடகை, ஆடைகள் ஆகிய பொருள்களுக்காகும் செலவுகளைச் செய்ய முடியாதவர்கள், ரவுண்டிரியின் கருத்துப்படி ஏழைகள். ஒரு குடும்பம் என்பது தாய், தந்தை மற்றும் மூன்று குழந்தைகள் வரை அடங்கியது. ஒரு குடும்பத்தின் வாரச் செலவு என்பது அன்றைய கணக்குப்படி 21 ஷில்லிங், 8 பென்ஸ் என அவர் வரையறுத்தார். இதன்பின் உலக வங்கி தங்களது ஆராய்ச்சியாளர்களை முடுக்கிவிட்டு உலகின் 66 நாடுகளின் கணக்கெடுப்பினை ஒப்பிட்டு ஒருநாளைக்கு ஒரு டாலர் வருமானத்திற்கு கீழே உள்ளவர்கள் ஏழைகள் எனும் கணக்கினைப் பிரசுரித்தது. 2001-ம் ஆண்டின் உலக வளர்ச்சி அறிக்கையின்படி ஒரு நாளைக்கு 1.08 டாலர் வருமானம் வறுமைக்கோட்டின் குறியீடு எனக் கணக்கில் கொள்ளப்பட்டது. இதன்படி ஆசியா, ஆப்பிரிக்கா, சஹாரா பகுதிகளில், வளர்ந்து வரும் நாடுகளில், இந்தியா உள்பட, கிட்டத்தட்ட 100 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள் எனும் கசப்பான உண்மை உலகுக்கு உணர்த்தப்பட்டது. உலகெங்கிலும் இதுபோன்ற கணக்கெடுப்புகள் தனிமனிதனின் வருமானத்தின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டு, ஏழ்மையை ஒழிப்பதற்கு எந்த மாதிரியான திட்டங்கள் உருவாக்கி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனும் விவாதம் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது. அகில உலகமும் வியக்கும் வகையில் இந்தியாவில் ஏழ்மையை ஆராய்ச்சி செய்து புதிய ஒரு விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது. நம் நாட்டின் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் ஒருநாளைக்குத் தேவையான உணவு எவ்வளவு எனக் கணக்கிடப்பட்டது. மேலும் சராசரியான உணவுத் தேவை மக்களின் வயது, ஆண் பெண் வித்தியாசம், அவர்கள் செய்யும் வேலை ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது. அதன்படி ஒருநாளைக்கு கிராமப்புறத்தில் 2400 கலோரி எரிசக்தியை அளிக்கத் தேவையான உணவு வாங்க ஆகும் செலவு எவ்வளவு எனக் கணக்கிடப்பட்டது. மேலே கூறப்பட்ட 2,400 கலோரி எரிசக்தி உருவாகத் தேவையான உணவுப்பொருள்களின் விலை, வசிக்க வீடு, உடுத்த உடை ஆகிய செலவுகளை அன்றைய விலைவாசிப்படி கணக்கிட்டு, அவ்வளவு வருமானத்திற்கு கீழே வாழ்பவர்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழே வசிக்கிறார்கள் என 1971-ம் ஆண்டுமுதல் இந்தியாவில் கணக்கிடப்படுகிறது. இதுபோன்ற கணக்கு சரியானதுதானா எனும் வாதம் அறிஞர்கள் மத்தியில் இன்றும் தொடர்கிறது. ஆனால், ஏதாவது ஒருவகையில் இதுபோன்ற கணக்கீடு செய்யப்பட்டால்தான் அரசு ஏழைகளுக்கான திட்டங்களுக்குச் செலவிடப்படும் பணம் சரியான வகையில் சரியானவர்களுக்கு போய்ச் சேரும் எனக் கருதி இன்றளவும் அது கையாளப்படுகிறது. ஆனால் ஏழ்மை பற்றி விஞ்ஞான ரீதியாகவும், உடல்கூறு ரீதியாகவும் இவ்வளவு சரியான அளவுகோல் உருவாக்கிய நாம் நம் நாட்டில் ஏழ்மையை அகற்றத் தவறிவிட்டோமே, அது ஏன்? மலேசியா போன்ற ஒரு நாட்டில் 20 ஆண்டுகளில் வறுமை ஒழிக்கப்பட்டுவிட்டது. அண்டை நாடான சீனாவில் வறுமை குறைந்து மக்களின் சுபீட்சம் உயர்ந்துள்ளது. நமது நிலைமை என்ன? உலகின் மிகச்சிறந்த பொருளாதாரப் பத்திரிகையான "தி எகனாமிஸ்ட்' நடந்து முடிந்த இந்திய தேர்தலின் முடிவை விவாதம் செய்துவிட்டு நமது நாட்டு நிலைமையை கீழ்க்கண்டவாறு விளக்கம் செய்துள்ளது: ""இந்த ஆண்டு சுமார் 2 கோடியே 70 லட்சம் குழந்தைகள் பிறக்கும். அதில் சுமார் 20 லட்சம் அடுத்த தேர்தலுக்குள் மடிந்து விடும். மீதமுள்ள குழந்தைகளில் சுமார் 40 சதவிகிதத்தினர் உடல் ஊனம் அல்லது குறுகிய உடல் வளர்ச்சியுடன்தான் வளர்ந்து வருவார்கள். காரணம், போஷாக்கு அற்ற உணவே அவர்களுக்குக் கிடைக்கும். பல குழந்தைகள் பள்ளிகளில் சேர்ந்தாலும் படிப்பிற்கு உத்திரவாதம் கிடையாது. காரணம் அவர்களது ஆசிரியர்களில் பலர் பள்ளிகளுக்கே வருவதில்லை. 5 ஆண்டுகள் கற்றபின்னரும் 60 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே ஒரு புத்தகத்தை வாசிக்கும் திறமையை பெறுவார்கள். அவர்களுக்கு சாதாரண கணக்குகள் கூட புரியாது''. ஆக, நாம் மத்திய அரசு மற்றும் மாநில அரசு தங்களது நிதிநிலை அறிக்கைகளில் பல்லாயிரம் கோடிகள் செலவு செய்தாலும் ஏழை மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் சரியான முறையில் நிர்வகிக்கப்படாமல் ஊழல் பெருகிய காரணத்தால் அத்திட்டங்களின் பலன்கள் ஏழைகளுக்குச் சென்றடைவதில்லை எனும் கசப்பான உண்மை பல ஆராய்ச்சியாளர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. தமிழகத்தைப் பொருத்தவரையிலும் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள மக்களின் எண்ணிக்கை சரியான முறையில் பராமரிக்கப்படுவதில்லை. உதாரணமாக, இன்றைய நிலைமையில், தமிழ்நாட்டில் மொத்தம் 2 கோடியே 56 ஆயிரத்து 107 ரேஷன் கார்டுகள் உள்ளன என மாநில அரசு கணக்குக் காட்டியுள்ளது. ஆனால் மத்திய அரசின் கணக்கெடுப்பில் பெறப்பட்ட கணக்குப்படி 36 லட்சத்து 32 ஆயிரத்து 119 குடும்பங்களே வறுமைக் கோட்டுக்குக் கீழே தமிழகத்தில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் தேர்தலுக்கு முன்னரேயே சுமார் 64 லட்சம் கலர் டிவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆக வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் என்றில்லாமல் எல்லோருக்கும் இலவசங்களும், மானிய விலையில் அளிக்கப்படும் ரேஷன் பொருள்களும் அள்ளி வீசப்படுகின்றன. காரணம், ஓட்டு வங்கி அரசியல். நம் நாட்டில் ஏழைகளைப் பற்றியும் ஏழ்மையைப் பற்றியும் பேசாத அரசியல் தலைவர்களே கிடையாது. ஆனால் அவை உண்மையிலேயே ஏழை மக்களின் பரிதாப நிலைமையைக் கணக்கிலெடுத்து உண்மையிலேயே அதற்குப் பரிகாரம் தேடும் முயற்சியா அல்லது கணிசமான ஓட்டுகளைப் பெறும் நோக்கத்தில் நீலிக்கண்ணீர் வடிக்கும் அரசியலா எனும் சந்தேகம் எழுகிறது. இந்திரா காந்தியின் வறுமை ஒழிப்புத் திட்டம் தொடங்கி இன்றைய குடியரசுத் தலைவரின் உரை வரையிலும் நாம் நிறையவே பேசி விட்டோம். ஆனால் மிகக் குறைந்த அளவுகூட செயல்படவில்லை என்பதுதான் உண்மை நிலை. ஏழை மக்களுக்கு எனத் தனியாக தீட்டப்பட்ட திட்டங்கள் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. 2007-ம் ஆண்டு தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில், பிரதமர் மற்றும் எல்லா மாநில முதல்வர்களையும் உடன் வைத்துக்கொண்டு அன்றைய நிதியமைச்சர் சிதம்பரம் ரேஷன் கடைகளில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களுக்கு 1 ரூபாய் பொருள் கிடைக்க வேண்டுமானால் அரசு 3 ரூபாய் 65 காசுகள் செலவு செய்ய வேண்டியுள்ளது எனும் கசப்பான உண்மையைப் பகிரங்கமாகத் தெரிவித்தார். நிறைய அரசு ஊழியர்கள், அவர்களுக்குத் தேவைக்கு மேல் ஊதிய உயர்வுகள் என ஆகிவிட்ட இந்தக் காலத்தில் ஒரு ரூபாய் பலன் சென்றடைய 3.65 ரூபாய் செலவு செய்வதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? தமிழ்நாட்டைப் பொருத்தவரை, இதைவிட அதிக செலவாகும். காரணம், இலவச அரிசியும், வறுமைக் கோட்டுக்குக் கீழே என நம் மாநில அரசு எடுக்கும் கணக்கெடுப்பில் நடுத்தர வருமானத்தவர்களும், போலி ரேஷன் கார்டுகளும் அடங்கும். ரேஷன் அரிசியின் கடத்தலையும் கணக்கிட்டால் நிலைமை இன்னும் மோசமாகும். மத்திய அரசின் கணக்குப்படி தமிழ்நாட்டின் 36 லட்சத்து 32 ஆயிரத்து 119 வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களின் வருமானம் பற்றிய புள்ளிவிவரம் ஒன்று வெளிவந்திருக்கிறது. அதன்படி, 7 லட்சத்து 21 ஆயிரத்து 706 குடும்பங்களுக்கு மாதம் ரூ. 250-க்கும் கீழ். 14 லட்சம் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் ரூ. 500. ஒரு லட்சத்து 86 ஆயிரம் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் ரூபாய் 1500 முதல் 2000 வரை. ஆனால், சுமார் 12 லட்சம் அரசு ஊழியர்களின் கடைநிலை ஊழியர்களின் மாதச் சம்பளம் ரூ. 5636 என்றிருந்ததை அதிகமாக்கி ரூ. 7410 ஆகவும், உயர்ந்த பதவியின் மாதச் சம்பளம் ரூ. 17,400 என்றிருந்ததை 37,400 என உயர்த்தியும் ஆணையிட்டபின் தமிழக முதல்வர் ஏழைகளுக்கு நல்ல பல காரியங்களைச் செய்ததுபோல் அரசு ஊழியர்களுக்கும் செய்யும் என அறிக்கை விட்டார். பிரபல ஆங்கிலப் பத்திரிகை சம்பள உயர்வு பெற்ற பல அரசு அலுவலர்களைச் சந்தித்து ஊதிய உயர்வு பற்றி கேட்டபோது ஓர் அதிகாரி தானும் தன் மனைவியும் அரசு வேலையில் இருப்பதாகவும், சம்பள உயர்வு முன்தேதியிட்டு வழங்கப்படுவதால் கணிசமான ஒரு தொகை தங்களுக்குக் கிடைக்கும் எனவும், அதன்மூலம் போலிரோ எனும் புதிய கார் ஒன்றை வாங்க இருப்பதாகவும் பேட்டியளித்துள்ளார். இதைக் கூர்ந்து கவனிக்கும்போது நம் நாட்டில் ஏழைகளின் சுபீட்சத்துக்கு உதவும் திட்டங்களுக்கு அரசு பட்ஜெட் பணம் செலவிடப்படுமா? அல்லது ஓட்டு வங்கி அரசியலுக்கும் ஊழல் ஆட்சியின் தொடர்ச்சிக்கும் சில பகுதியினருக்கு தேவைக்கு மேல் சலுகைகள் வழங்குவதற்கும் செலவிடப்படுமா எனும் சோகமான கேள்வி நம் மனதில் எழுகிறது. 1963-ம் ஆண்டு அமெரிக்க எழுத்தாளர் வெல்ஸ் ஹேங்கன், ""இந்தியாவின் சோகம் வறுமையல்ல. வறுமையை ஏற்றுச் சகித்துக்கொண்டு வாழும் ஏழை மக்களே!'' எனக் கூறியது இன்றளவும் உண்மை எனத் தோன்றுகிறது.

Comments